குடியரசு துணை தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு முதன் முறையாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சுதந்திரத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி, நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் ஒருங்கிணைப்புக்கு இருந்த தடை நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், பெண்கள் அதிகாரமளிப்புச் சட்டத்தின் மூலம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழில் பேச்சை தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு அதிகளவில் வாக்குகள் பதிவானதை சுட்டிக்காட்டினார்.
நமது அரசியலமைப்பு சட்டமும், பாரதமும் என்றென்றும் ஒன்றாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சமூக நீதி, பின்தங்கிய வகுப்பினருக்கு பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றில் நமது உறுதிப்பாட்டை அரசியலமைப்பு சட்டம் பிரதிபலிப்பதாகவும், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், உலகளவில் மாறிவரும் நீதித்துறை, நிதித்துறை உள்ளிட்டவற்றில் சீர்திருத்தம் மேற்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
















