ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது உயிரை துச்சமெனக் கருதி பாகிஸ்தான் நடத்தவிருந்த மிகப்பெரிய சதித்திட்டத்தை முறியடித்து 250 பேரின் உயிரைக் காத்த சிஆர்எஸ்எப் வீரர்களுக்கு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையை மேற்கொண்டதில், பாகிஸ்தானில் உள்ள முக்கியமான பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய பாகிஸ்தான் ராணுவத்திற்கும் கடும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தான் நடத்தவிருந்த மிகப்பெரிய சதித்திட்டத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்தச் செயலில் ஈடுபட்ட 19 வீரர்களுக்கு இயக்குநர் ஜெனரல் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடங்கப்பட்ட மே 6ம் தேதி இரவு உரி நீர்மின் நிலையத்தை நோக்கிப் பாகிஸ்தான் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, துணை தளபதி ரவி யாதவ் தலைமையிலான குழு, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டே, அப்பகுதியில் உள்ள 250 பேரை பாதுகாப்பாக வெளியேற்றினர். பாகிஸ்தான் டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிஐஎஸ்எப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















