உலகளவில் 10 நிமிடத்திற்கு ஒரு பெண் கொல்லப்படுவதாகவும் நாள்தோறும் சராசரியாக 137 பெண்கள் கொல்லப்படுவதாகவும் ஐ.நா. அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உலகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய நாடுகள் அவை தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு 83 ஆயிரம் பெண்கள், இளம்பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் சுமார் 50 ஆயிரம் பேர் தனது தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களால் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 137 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்படுவதாகவும் 10 நிமிடத்துக்கு ஒரு பெண் கொல்லப்படுவதாகவும் ஐநா கவலை தெரிவித்துள்ளது.
பாலின சமத்துவம் இல்லாததாலே பெரும்பான்மையான கொலைகள் நடப்பதாகக் கூறும் ஐ.நா., இடப்பெயர்வு, பொருளாதார பாதுகாப்பின்மை, பாதுகாப்பு அமைப்புகளின் குறைபாடு, இணைய மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவை பிற காரணிகள் எனத் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான பெண் கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 600 என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஐநா குறிப்பிட்டுள்ளது.
















