படகில் வந்த பயங்கரவாதிகள் நடத்திய மும்பை தாக்குதல் நடந்து 17 ஆண்டுகள் கடந்தாலும் ஆறாத வடுக்களுடன் ஒரு கொடூரக் கனவில் இருந்து மீள முடியாமலே பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
17 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. இந்தப் பயங்கரவாத தாக்குதல், இந்திய வரலாற்றில் 1993-ல் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு நடந்த மிக மோசமான தாக்குதலாகும்.
கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த 10 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளால் நகரத்தின் மிகவும் பரபரப்பான பகுதிகளான தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்கள், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், நாரிமன் ஹவுஸில் உள்ள யூத மையம், காமா மருத்துவமனை, மெட்ரோ சினிமா மற்றும் லியோபோல்ட் கஃபே ஆகிய இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.
நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த மோதலில் 9 பயங்கரவாதிகள், 15 போலீசார், 2 என்எஸ்ஜி கமேண்டோக்கள், 29 வெளிநாட்டினர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 300 பேர் படுகாயமடைந்தனர். சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டான்.
கசாப்பை தனது உயிரைக் கொடுத்துப் பிடித்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் துக்காராமும் தாக்குதலில் பலியானார். 2010ம் ஆண்டு மே மாதம் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட கசாப், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2012-ல் தூக்கிலிடப்பட்டான். இந்தக் கொடூரத் தாக்குதலை நேரில் பார்த்தவர்களும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களும் ஆறாத காயங்களுடன் இன்றும் பயங்கரவாத கொடுமையின் சாட்சிகளாக உள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையில் சாட்சியம் அளித்தவர்களிலேயே மிக இளையவரான 9 வயது சிறுமி தேவிகா தான் கூட்டம் நிரம்பி வழிந்த நீதிமன்றத்தில் பயங்கரவாதி கசாபை அடையாளம் காட்டினார்.
சாதாரண பழ வியாபாரியின் மகளான தேவிகா, சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் ரயில் நிலையத்தில் பயங்கரவாதி கசாப் நடத்திய தாக்குதலில் காலில் குண்டு துளைக்கப்பட்டு, ஆறு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 65 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபின் வீடு திரும்பினார்.
அப்போதே பெரியவளான பிறகு IPS ஆகி இந்தியாவை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பேன் என்று கூறியிருந்தார். சொன்னது போலவே இப்போது காவல்துறை அதிகாரியாக இருக்கும் தேவிகா, இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக்கில் தனது பெயரை ‘தேவிகா ரோட்டவன்26/11’ என்றும் ‘மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட மிக இளைய நபர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கு நாட்டின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ‘இனி ஒருபோதும் இல்லை’ (Neverever) என்ற கருப்பொருளின் கீழ் மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் 17வது ஆண்டு நினைவு அஞ்சலியை டெல்லி கேட்வே ஆஃப் இந்தியாவில் தேசிய பாதுகாப்புப் படை நடத்தியுள்ளது.
பயங்கரவாதிகளுடனான சண்டையில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏற்றப்படும் மெழுகுவர்த்திகளின் மெழுகைக் கொண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக, “வாழும் நினைவுச் சின்னம் (Living Memorial)” அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















