கோயம்புத்தூரில் பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் கோட்டப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆண் யானை ‘ரோலக்ஸ்’ பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மந்திரிமட்டத்தில் ரேடியோ காலர் பொருத்தி விடுவிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் ரேடியோ காலர் சிக்னலின் அடிப்படையில், வனத்துறையினர் யானையை கண்காணித்தனர்.
இந்நிலையில் நீர்நிலைக்கு தண்ணீர் குடிக்க சென்ற யானை வழுக்கி கீழே விழுந்ததை கண்காணிப்பு குழுவினர் கண்டனர். சில நிமிடங்கள் காத்திருந்தும், யானை எழுந்திருக்காததால், அவர்கள் மெதுவாக அருகில் சென்று பார்த்தபோது, யானை இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.
தலைமை வனவிலங்கு காப்பாளர் தலைமையில் யானையின் உடல் பரிசோதனை இன்று நடைபெற உள்ள நிலையில் யானையின் இறப்பு குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
















