தூத்துக்குடி அருகே டாஸ்மாக் பாரில் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட காப்புலிங்கம்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் கோமு. மதுவுக்கு அடிமையான கோமுவுக்கும் அவரது மனைவி தங்கத்தாய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் தங்கத்தாய் அவரது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் அவரை உறவினர்கள் மந்திரம் மற்றும் முருகன் ஆகியோர் மறைத்து வைத்துள்ளதாக கோமுவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை பாரில் மந்திரமும், முருகனும் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற கோமு அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். அங்கிருந்தவர்கள் மந்திரம் மற்றும் முருகன் ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கோமுவை தேடி வருகின்றனர்.
















