2030ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி அகமதாபாத் நகரில் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில், விளையாட்டு போட்டிகளின் திருவிழாவாக ஒலிம்பிக் கருதப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக அதிக எண்ணிக்கையிலான நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டியாக காமன்வெல்த் போட்டி விளங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டி, 2026ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து 2030ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமல்வெல்த் விளையாட்டின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் இவ்வாறு அறிவிப்பு வெளியானது.
கடந்த 2010ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டி நடைபெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த முடிவு இந்தியாவின் விளையாட்டுத்துறையில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே 2030ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வாத்தியங்கள் இசைத்தும் நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனிடையே காமன்வெல்த் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றது, மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நமது கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் மனப்பான்மை ஆகியவையே, இந்தியாவை உலக விளையாட்டு வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் வசுதைவ குடும்பகம் என்ற கொள்கையுடன் வரலாற்று சிறப்புமிக்க விளையாட்டுகளை கொண்டாட ஆர்வத்துடன் உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















