உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர், கடிதம் எழுதி வைத்துவிட்டு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் 2023ஆம் ஆண்டு முதல் சிறப்பு படை காவலராக பணியாற்றி வந்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர், அதிகாலை 3 மணியளவில் பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த சக காவலர்கள் மகாலிங்கத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோனை செய்த மருவத்துவர்கள் ஏற்கனவே காவலர் மகாலிங்கம் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து மகாலிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று மகாலிங்கம் கடிதம் எழுதியுள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும், காவலர் மகாலிங்கத்தின் தற்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















