திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு எனக் கூறி அழைத்து வந்து காக்க வைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக டன் கணக்கில் குப்பைகளை முதலிபாளையம், நல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர்.
இந்நிலையில் முதலிபாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதை தெரிவிக்கும் வகையில், ஈரோட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காண்பித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகக் கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.
இதனை அறிந்த மாநகர போலீசார் போராட்டக் குழுவினர்கள் நான்கு பேருக்கு விசாரணை அழைப்பாணையை அனுப்பி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்தனர். அவர்களை நல்லூர் காவல் நிலையத்தில் நீண்ட நேரம் காக்க வைத்ததால் 50 – க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
















