இலவச நிலம், இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கான ஒரு சதவீத இறக்குமதி வரி மற்றும் 5 ஆண்டுகளுக்கான வரிவிலக்கு என ஏராளமான சலுகைகளை வழங்கி இந்திய தொழிலதிபர்களை ஆப்கானில் தொழில் தொடங்க அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2021 ஆம் ஆண்டு ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியது. அதற்கு முன்பே அந்நாட்டில், புதிய நாடாளுமன்றம், மின்னுற்பத்தி நிலையங்கள், சாலைகள், மருத்துவமனைகள் அணைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் சுமார் 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் இந்தியா முதலீடு செய்திருந்தது. இது இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்கான் அரசு கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, முத்தாகியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசினார். இந்தியாவின் அழைப்பை ஏற்று, முத்தாகி முதல் முறையாக இந்தியாவுக்கு வந்தார். பிறகு ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தொழில்நுட்ப மையம், இந்திய தூதரகமாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த மாதம் பாகிஸ்தான் ஆப்கான் எல்லை மோதல்கள் தீவிரமானதையடுத்து கத்தாரில் நடந்த இருநாடுகளுக்குமான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பாகிஸ்தானிடம் இருந்து மருந்துபொருட்கள் உள்ளிட்ட பிற பொருட்களை இறக்குமதி செய்ய ஆப்கான் அரசுத் தடை விதித்தது.
தீவிரவாதிகளுக்கு ஆப்கனிஸ்தான் அரசு ஆதரவளித்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பாகிஸ்தான், எல்லையை மூடியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் நடவடிக்கை ஆப்கான் வர்த்தகர்களை மட்டுமல்ல, சந்தைகளையும் சீர்குலைத்து சாதாரண மக்களையும் பாதித்துள்ளதாக ஆப்கான் துணைப் பிரதமர் முல்லா பரதர் தெரிவித்திருந்தார்.
மேலும், பாகிஸ்தானில் இருந்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, மாற்று வர்த்தக இடங்கள் மற்றும் போக்குவரத்து வழிகளைத் தேடுமாறு வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் ஹாஜி நூருதீன் அசிசி, ஆப்கானிஸ்தானில் இந்திய தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
வர்த்தகம், இணைப்பு மற்றும் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள்குறித்து அசிசி விவாதித்தாகவும் ஆப்கானிஸ்தான் மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்கான இந்தியாவின் ஆதரவை கேட்டுக் கொண்டதாகவும் மத்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் இந்தியாவுக்கு வருகை தந்த ஆப்கானிஸ்தான் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் இருநாடுகளுக்கும் இடையேயான ஒரு பில்லியன் டாலர் வர்த்தகத்துக்கான ஒப்பந்தந்தில் கையெழுத்திட்டுள்ளார்.
ஆப்கானில் உருவாக்கப்படும் தயாரிப்புகளுக்கான இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் இறக்குமதிக்கு ஒரு சதவீத முன்னுரிமை வரியும், முதல் 5 ஆண்டுகளுக்கான முழுமையான வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட தொழில்துறைகளில் இந்திய முதலீடுகளுக்கான ஊக்கமும் சலுகைகளும் உள்ளடக்கிய பரந்த பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முதலீட்டாளர்களுக்கும் அமைதியான வணிக நட்புச் சூழலை ஆப்கான் அரசு உருவாக்கித் தரும் என்றும் ஆப்கானிஸ்தான் தொழில் துறை அமைச்சர் அசிசி உறுதியளித்துள்ளார்.
கூட்டு வர்த்தக சபையை நிறுவவும், தூதரகங்களுக்கிடையே வணிகத் தொடர்புகளை ஏற்படுத்தவும் வர்த்தகம் மற்றும் முதலீடுகுறித்த கூட்டுப் பணிக்குழுவை புதுப்பிக்கவும் இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. காபூல்-டெல்லி, காபூல்-அமிர்தசரஸ் இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விமான சரக்கு வழித்தடம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சரக்கு விமானங்கள் மிக விரைவில் செயல்படத் தொடங்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா, திராட்சை, குங்குமப்பூ, மாதுளை, கம்பளங்கள் மற்றும் சில மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதேபோல் இந்தியாவில் இருந்து அரிசி, மசாலாப் பொருட்கள், காய்கறிகள், தேநீர் டீ, காஃபி, பருத்தி, மருந்துகள் மற்றும் இதர வர்த்தகப் பொருட்களும் அதிகளவில் ஆப்கானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
லித்தியம், தாமிரம் மற்றும் அரிய மண் உள்ளிட்ட 3 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பயன்படுத்தப்படாத அரியவகை கனிமங்களை ஆப்கானிஸ்தான் கொண்டுள்ள நிலையில் தூய்மையான எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப லட்சியங்களுக்கு இந்தியா அதைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகம் முதலீடு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்காகப் பாகிஸ்தானை சார்ந்திருப்பதைக் குறைக்க ஆப்கானிஸ்தானும் உறுதியாக உள்ளது.
















