தைவானுக்கு ஆதரவாக அந்நிய சக்திகள் மூக்கை நுழைத்தால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஜப்பானுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்திருக்கும் தீவு தைவான். மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் அதிகாரம் செலுத்த தைவானை கைப்பற்றுவதை சீனா மிக அவசியமாகப் பார்க்கிறது.
குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க ராணுவ தளங்களை இங்கிருந்து எளிதாகத் தாக்க முடியும் என்பதால், தைவானை கைப்பற்ற சீனா துடிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே வெடித்த மோதலில், சீனா-தைவான் பிரிவு ஏற்பட்டது. 1949-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தச் சண்டையில், கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி பெற, அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.
கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சியினர் தைவானுக்கு தப்பி ஓடினர். தைவான் வரலாற்றில் குறிப்பிடத் தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், அந்நாட்டின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தைவானை இறையாண்மை கொண்ட நாடாக வாட்டிகன் உள்ளிட்ட 13 நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால், தைவானை தங்களது பிராந்தியம் என்றும், அதனை தனி நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சீனா திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறது.
காரணம், செமிகண்டக்டர் உற்பத்தியில் தைவான் சிறந்து விளங்குவது முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இங்கிருந்து தயாரிக்கப்படும் மின்னனு சிப்கள் வேறு நாடுகளுக்கு மிக எளிதாகக் கிடைத்துவிட்டால், தங்களது பொருளாதாரம் கவிழ்ந்து விடும் எனச் சீனா அஞ்சுகிறது. அதுமட்டுமல்ல, ராணுவ ரீதியாகவும் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் தைவானை விட்டுக்கொடுக்க மறுக்கிறது சீனா.
இந்நிலையில், தைவான் பிரச்னையில் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தலையிடுவதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. அதிலும், ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி அண்மையில் தெரிவித்த கருத்து சீனாவை கோபப்படுத்தியிருக்கிறது. தைவான் மீது ஆதிக்கம் செலுத்தினால், ஜப்பான் ராணுவ நடவடிக்கை எடுக்கும் எனச் சானே தகைச்சி எச்சரிக்கை விடுக்க, சீன வெளியுறவுத்துறை கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது.
இதனைத்தொடர்ந்து, தைவானை சீனா சீண்டினால், தைவானுக்கு அருகில் உள்ள தீவில் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்படும் என்று ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷின்ஜிரோ கெய்சுமியும் எச்சரிக்க விடுக்க போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தங்கள் இறையாண்மைக்கு அந்நிய சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதற்கான விளைவுகள் கடுமையாக இருக்கும் எனச் சீனாவும் வார்த்தைகளை அள்ளி வீசியிருப்பதால் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
உலகின் பரபரப்பான கடல் வணிகப்பாதையில் ஒன்றான தென் சீனக்கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம், சர்வதேச பொருளாதாரத்தை பின்னுக்கு இழுத்து சென்று விடுமோ என்ற அச்சம் மற்ற உலக நாடுகளுக்கு எழுந்திருக்கிறது.
















