காதலித்த பெண்ணை ரயில் முன்பு தள்ளிவிட்டுக் கொலை செய்த வழக்கில் சதீஷ் என்பவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவியும், சதீஷ் என்பவரும் காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பு காரணமாகச் சதீஷுடன் பேசுவதை மாணவி நிறுத்தியதாகவும் கூறப்பட்டது.
2022ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்குச் செல்லப் பரங்கிமலை ரயில் நிலையம் வந்த மாணவியை, மின்சார ரயிலில் தள்ளிவிட்டுக் கொலை செய்ததாகச் சதீஷ் கைது செய்யப்பட்டார். சிபிசிஐடி பதிவு செய்த இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், சதீஷுக்கு தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
மரண தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சதீஷ் தரப்பிலும் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம் தீர்ப்புத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் சதிஷ்குமார், ஜோதிராமன் அமர்வு தீர்ப்பளித்தது.
அதில், குற்றவாளி சதீஷுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது உத்தரவிட்டனர். மேலும், 20 ஆண்டுகளுக்குத் தண்டனை குறைப்பு ஏதும் வழங்கக் கூடாது என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
















