சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திமுக கிளைச் செயலாளர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த கிராங்காடு மலை கிராமத்தைச் சேர்ந்த திமுக கிளை செயலாளர் ராஜேந்திரன், கடந்த 21ம் தேதி நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவரது மனைவி சரிதா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் ராஜமாணிக்கம் மற்றும் அவரது மூத்த சகோதரர் பழனிசாமி ஆகியோரை அழைத்து விசாரித்தனர்.
அப்போது ராஜேந்திரனுக்கும், ராஜமாணிக்கத்திற்கும் இடையே 10 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்ததும்,வழக்கில் ராஜேந்திரனுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் தெரியவந்தது.
தனது தோட்டத்திற்கு செல்ல ராஜேந்திரன் வழிவிடாததால், ராஜமாணிக்கம் தினசரி ஒரு கிலோ மீட்டர் சுற்றிச் சென்று வந்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ராஜேந்திரனை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, ராஜமாணிக்கம், அவரது மனைவி ஜெயக்கொடி, பழனிசாமி, அவரது மருமகன் குழந்தைவேலு ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். நிலத்திற்கு வழிவிடாத காரணத்தால் ஒரு குடும்பமே சேர்ந்து ஒருவரை தீர்த்துகட்டிய சம்பவம் கருமந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















