மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் அடிப்படை, தர்மமும், அதர்மமும்தான் என சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு அருளுரை வழங்கியுள்ளார்.
டெல்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம், இந்தியா ஹேபிடட் வளாகத்தில் பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், இன்று தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால் வசதி, வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதே சமயம், இன்பம் மற்றும் துன்பங்கள் இன்றும் நீடிக்கின்றன என்பதை நினைவூட்டிய அவர், இன்பம், துன்பத்துடன் தொழில்நுட்பம் தொடர்புடையவை அல்ல என்றும், அவை தர்மம் மற்றும் அதர்மத்துடன் தொடர்புடையவை என்றும் அறிவுரை வழங்கினார்.
நிரந்தரமான மகிழ்ச்சியை விரும்புவதும், துன்பத்தைத் தவிர்க்க விரும்புவதும் அனைவருக்கும் பொதுவானது எனக்கூறிய சிருங்கேரி ஜகத்குரு, நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வடிவத்தில் துன்பத்தை அனுபவிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
















