நைஜீரியாவில் ஆட்கடத்தல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நாடு தழுவிய பாதுகாப்பு அவசரநிலையை அந்நாட்டின் அதிபர் போலா அகமது டின்பு அறிவித்துள்ளார்.
அண்மை காலமாக நைஜீரியாவில் பல பகுதிகளில் தொடர்ச்சியாகத் தாக்குதல்களும் ஆட்கடத்தல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
ஒரே வாரத்தில் 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள், 38 வழிபாட்டாளர்கள், 300க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்டவர்களின் நிலைமை குறித்து தகவல் வெளியாகாத நிலையில் அவசர நிலையைச் சமாளிக்கவும், பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்தவும் அதிபர் டின்பு பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையில் கூடுதல் ஆட்களைச் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் புதிய காவலர்களை பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் தலைவர்கள் மற்றும் விஐபி-க்களின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த காவல்துறையினரை அடிப்படைப் பணிகளுக்குத் திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மறைந்திருக்கும் பயங்கரவாதிகள் மற்றும் கொள்ளையர்களை வேட்டையாட, உளவுத்துறை மூலம் வனப் பாதுகாவலர்களை உடனடியாக நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
















