மன்னார் வளைகுடாவில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், நெல்லை மீனவர்கள் கடலுக்குச் செல்ல 7வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உவரி, இடிந்தகரை, கூத்தன்குழி உட்பட 10 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குச் சுமார் எட்டாயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள், நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டிட்வா புயல் காரணமாகத் தென் தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45- 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக நெல்லை மீனவர்கள் 7வது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
















