பாகிஸ்தானில் நேரடி ராணுவ ஆட்சியில்லாமலேயே அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், தலைமை தளபதி அசிம் முனீர் புதிய “CHEIF OF DEFENCE FORCES” பதவிக்கு உயர்த்தியிருப்பது, மூன்று படைகளையும், நாட்டின் அணு ஆயுதங்களையும் ஒரே மனிதரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க செய்துள்ளது.
பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதியான அசிம் முனீர் நாட்டின் முதல் “CHEIF OF DEFENCE FORCES” ஆகப் பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து, அந்நாட்டு ராணுவத்தின் அதிகாரம் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. பாகிஸ்தானின் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய 27-வது திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தப் பதவி உருவாக்கப்பட்டது.
இந்தப் பதவியை ஏற்றதன் மூலம் அசிம் முனீர், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட தலைவராக அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் ராணுவ தலைமை தளபதியாகப் பொறுப்பேற்ற அசிம் முனீர், அதற்கு முன்பு வரை குவாட்டர் மாஸ்டர் ஜெனரல், குஜ்ரன்வாலா கோர் கமாண்டர், ராணுவ உளவுத்துறை தலைவர் மற்றும் பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.
முன்னதாகக் கடந்த 2019-ல், அப்போது பிரதமராக இருந்த இம்ரான் கான் அவரை ஐஎஸ்ஐ தலைவர் பதவியிலிருந்து 8 மாதங்களில் நீக்கினார். அதற்கான காரணங்கள் ஏதும் இன்று வரை வெளியாகவில்லை. பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான் கானை பதவியில் இருந்து அகற்றியதையடுத்து, இறுதியாக உருவான ஷெஹ்பாஸ் ஷெரீஃப் அரசு முனீரை மீண்டும் ராணுவ தலைமை தளபதி பொறுப்பில் அமர்த்தியது.
இந்நிலையில், தற்போது அவர் அடுத்தகட்டமாக “CHEIF OF DEFENCE FORCES” என்ற உயர்ந்த நிலையை அடைந்துள்ளார். அந்நாட்டின் செனட் சபையில் கடந்த 1-ம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்த 27-வது சட்ட திருத்தம், முன்னாள் பிரதமர் ஜுல்பிகார் அலி புத்தோ கடந்த 1976-ல் உருவாக்கிய “Joint Chiefs of Staff Committee” தலைவரின் பதவியை ரத்து செய்தது.
கடந்த 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில் அந்நாடு தோல்வியடைந்த பிறகு அந்த துறை உருவாக்கப்பட்டிருந்தது. அந்தப் பதவியில் இருந்த ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் ஓய்வு பெற்ற நிலையில், பல தசாப்தங்களாக இருந்த அந்த அமைப்பு நிரந்தரமாகக் கலைக்கப்பட்டுள்ளது.
240 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அணு ஆயுத சக்தியான பாகிஸ்தான் உருவான 1947-ம் ஆண்டு முதல், ராணுவமும், குடியரசு ஆட்சியும் மாறிமாறி அந்நாட்டை ஆண்டு வந்தன. கடைசியாகக் கடந்த 1999-ம் ஆண்டு ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப், ராணுவ புரட்சியை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடித்து கடந்த 2008-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். அதன் பிறகு அங்கு அதிகாரப்பூர்வமாகக் குடியரசு ஆட்சி நிலவி வந்தாலும், அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ராணுவத்தின் செல்வாக்கு மேலோங்கியே உள்ளது.
பாகிஸ்தானின் இந்த ஆட்சி முறையைப் பல ஆய்வாளர்கள் “கலப்பு ஆட்சி” எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சூழலில் தற்போதைய 27-வது திருத்தம் எஞ்சியிருந்த சமநிலையையும் மேலும் கூடுதலாக ராணுவம் வசம் தள்ளியுள்ளது. குறிப்பாக ராணுவத்தின் தலைமை தளபதி மற்ற இரு படைகளின் தளபதிகளை விட மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டு, நாட்டின் அணு ஆயுதங்களின் முழு பொறுப்பும் ஒருவரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முப்படைகளின் மொத்த கட்டுப்பாடும் அதிபர் மற்றும் அமைச்சரவையிடமிருந்து கைமாறி, நேரடியாகப் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பதவியின் மூலம் அசிம் முனீரின் பதவிக் காலம் மீண்டும் புதிதாக தொடங்கியுள்ளது. இந்த புதிய திருத்த சட்டத்தின்படி அவர் குறைந்தபட்சம் 2030-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த சட்டத்தின்படி ஆசிம் முனீர் தற்போது ஓய்வு பெற்றிருக்க வேண்டிய நிலையில், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின் மூலம் முப்படை தளபதிகளின் பதவிக் காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. அதன்படி அசிம் முனீர் வரும் 2027-ம் ஆண்டு நவம்பர் வரை ராணுவ தலைமை தளபதி பொறுப்பில் தொடரும் நிலை உருவானது. ஆனால் தற்போது கிடைத்துள்ள இந்தப் புதிய பதவியோ அவரது அதிகார பலத்தை கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
அசிம் முனீருக்கு பாகிஸ்தான் அதிபருக்கு வழங்கப்படும் உயரடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், “CHEIF OF DEFENCE FORCES” என்ற பொறுப்பு மூலம் அதிபரைப் போலவே ஆயுள் முழுவதும் வழக்கு தொடர முடியாத நிலையை அவர் அடைந்துள்ளார். இந்தப் பாதுகாப்பு உச்சவரம்பு விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் பதவிக் காலம் முடியும் தருவாயில் அசிம் முனீர், தன்னை மீண்டும் நியமிக்கும்படி அதிபர் மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்தால், அது மறுக்கப்படும் வாய்ப்பு குறைவு எனப் புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இம்மாதிரியான சட்டத்திருத்தம் ராணுவம் மீதான அரசின் கண்காணிப்பை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், குடியரசு அரசின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் இருந்த “VICE CHEIF OF ARMY STAFF”-ஐ பரிந்துரைக்கும் அதிகாரம் உள்ளிட்டவை இனி CDF-யிடம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, இஸ்லாமாபாத் அணு ஆயுத களஞ்சியத்தை மேற்பார்வையிடும் “NATIONAL STRATEGIC COMMAND” தலைவரைத் தேர்ந்தெடுப்பதிலும் தற்போது ராணுவத்தின் குரல் மேலோங்கியுள்ளது. இந்தப் பதவிக்கான தேர்வு ராணுவத்தில் இருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதையும், அந்த நியமனத்தை செயல்படுத்த நீதியமைச்சர் CDF-ன் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் திருத்தங்கள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், CDF-ஆக பொறுப்பேற்றுள்ள அசிம் முனீர் தற்போது பாகிஸ்தானில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராகிவிட்டதாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளரான நயீம் காளித் தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்களே அவரை இத்தனை சக்தி வாய்ந்த நபராக மாற்றியுள்ளதாகக் கருத்து தெரிவித்துள்ள அவர், தங்கள் குறுகிய கால நலனுக்காக அவர்கள் பாகிஸ்தானின் நீண்ட கால நலனை பணயம் வைத்து விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானின் எதிர்காலம் வலுவான பொருளாதாரம் மற்றும் நிலையான அரசியல் அமைப்பை மட்டுமே நம்பியுள்ள நிலையில், தற்போது அவை இரண்டிலும் அந்நாடு பின்தங்கியுள்ளதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் அசிம் முனீர் அரசியலமைப்பு மாற்றங்கள்மூலம் ராணுவத்தின் பலத்தை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியிருப்பது அந்நாட்டின் எதிர்காலத்தை என்னவாக மாற்றப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
















