இந்திய கடற்படையின் MH-60R கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை அடுத்த 5 ஆண்டுகள் பராமரிப்பதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
கடந்த 2020-ல் MH 60R ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் வினியோகம், 2021ல் இருந்து தொடங்கியது.
இந்த நிலையில், அவற்றை அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பராமரிப்பதற்காக, அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 7 ஆயிரத்து 995 கோடி ரூபாய் ஆகும்.
உதிரிபாகங்கள் வழங்கல், பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவி, பழுது நீக்கம் ஆகிய அனைத்தும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















