முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தேர்வு எழுதியவர்களில் 85 ஆயிரம் பேர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு பணியில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக 2022ஆம் ஆண்டு அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழ் தேர்வில் மொத்தம் உள்ள 50 மதிப்பெண்களில் 20 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றால்தான் பாடம் சார்ந்த விடைத்தாளை மதிப்பீடு செய்ய முடியும் என்ற நடைமுறையுள்ளது.
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 996 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வை முதுநிலை பட்டதாரிகள் 2 லட்சத்து 36 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 85 ஆயிரம் பேர் 20 மதிப்பெண்கள் கூட எடுக்காமல் தோல்வியடைந்துள்ளனர்.
தமிழ் தேர்வில் தோல்வியடைந்ததால் இவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முனைவர் பட்டம் பெற்றவர்களும், ஐந்து பட்டங்களை பெற்றவர்களும் தாய்மொழியான தமிழில் 20 மதிப்பெண் எடுக்க முடியாமல் தோல்வியடைந்திருப்பது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது.
















