தொடர்ந்து பெய்யும் கனமழையால் சென்னை மற்றும் புறநகா் பகுதிகள் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன.
வடதமிழகத்தை அச்சுறுத்தி வந்த டித்வா புயல் வலுவிழந்து சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது.
இதனால் நேற்று காலைத் தொடங்கி விடிய விடிய சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் குடியிருப்புகளையும், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் தண்ணீா் தேங்கியது.
முக்கியச் சாலைகளான அண்ணா சாலை, காமராஜா் சாலை, பெரியாா் ஈவெரா சாலை, ஆற்காடு சாலை, ராஜாஜி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட அனைத்து பிரதான சாலைகளிலும் தண்ணீா் தேங்கி நின்றது.
இதுபோல வடசென்னை பகுதிகளுக்குள்பட்ட சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூா், பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், போரூா், மணப்பாக்கம், ராமாபுரம், பூந்தமல்லி, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீா் தேங்கி நின்றதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேய முடங்கும் நிலை ஏற்பட்டது.
















