கடந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளை திரும்பப் பெற்ற 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்க ஐஐடி தடைவிதித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகம் உயர்தர பொறியியல் படிப்பிற்காக உலகம் முழுவதும் பிரபலமானவை.சென்னை உட்பட நாடு முழுவதும் 23 ஐஐடி மையங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் 2 கட்டங்களாக ஐஐடி வளாகங்களுக்கு வரும் பன்னாட்டு முன்னணி நிறுவன உயர் அதிகாரிகள் இறுதி ஆண்டு மாணவர்களை தங்கள் நிறுவனங்களில் பணியாற்ற நேர்முக தேர்வு நடத்தி தேர்வு செய்வது வழக்கம்.
“கேம்பஸ் இன்டர்வியூ” என அழைக்கப்படும் இந்த “வளாக நேர்காணல்” முறையில் தேர்வாகும் மாணவர்களுக்குப் பெரும் தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த கல்வி ஆண்டில் தேர்வான மாணவர்கள் வேலைக்குச் சேரும் தேதிக்குச் சில நாட்களுக்கு முன்பு சில நிறுவனங்கள் தங்கள் சலுகைகளை ரத்து செய்தன.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் வேறு எந்த வேலை வாய்ப்பும் இல்லாமல் தவித்தனர். இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்க ஐஐடி தடைவிதித்துள்ளது.
















