புதியதாகத் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல்களிலும் அரசின் பாதுகாப்பு செயலியான (Sanchar Saathi) சஞ்சார் சாதி செயலியை Pre-Install செய்திருக்க வேண்டியது கட்டாயம் என வெளியான தகவல்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியது ஏன்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் பாதுகாப்பில் முழுமையான அக்கறை கொண்டுள்ள மத்திய தொலைத் தொடர்புத் துறை, 2023ம் ஆண்டு மே மாதம் Sanchar Saathi இணையதளத்தைத் தொடங்கியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 17ம் தேதி, சஞ்சார் சாதி (Sanchar Saathi) மொபைல் செயலி அறிமுகப்படுத்தப் பட்டது.
இது தொலைத்தொடர்பு பாதுகாப்பு சேவைகளை நேரடியாகப் பெற அனுமதி அளிக்கிறது. DoT ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் கிடைக்கும் இந்தச் செயலி, வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைத்தொடர்பு அடையாளத்தைப் பாதுகாக்கவும், சைபர் மோசடிகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கவும் உறுதியளிக்கிறது. KYM அம்சத்துடன் சஞ்சார் சாதி செயலி கொண்டுவரப் பட்டுள்ளது.
ஆங்கிலம், இந்தி உட்பட 21 மாநில மொழிகளில் செயல்படும் இந்தச் செயலிக்கு , கூகிள் பிளேஸ்டோரிலிருந்து 1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களும், ஆப்பிள் ஸ்டோரிலிருந்து 9.5 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களும் உள்ளன. மக்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்ட இந்த Sanchar Saathi இணையத் தளத்தை 16.7 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர்.
26 லட்சத்துக்கும் அதிகமான திருடப்பட்ட அல்லது தொலைந்து போன செல்போன்களை மீட்கவும், புகார்களின் அடிப்படையில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மொபைல் இணைப்புகளைத் துண்டிக்கவும், இந்தச் சஞ்சார் சாதி செயலி பயன்பட்டுள்ளது. இதில் உள்ள Chakshu என்ற அம்சம் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் தீங்கிழைக்கும் இணைப்புகள் அல்லது தீங்கு விளைவிக்கும் தகவல்தொடர்புகளைத் தடுக்க பயன்படுகிறது.
ஃபிஷிங் இணைப்புகள் மற்றும் நிதி மோசடிகள் முதல் சரிபார்க்கப்படாத APK கோப்புகள், குளோனிங் முயற்சிகள் அல்லது SMS, RCS, iMessage, WhatsApp, Telegram மற்றும் பிற தளங்கள் மூலம் பெறப்பட்ட ஸ்பேம் செய்திகள் வரை அனைத்தையும் இது தடுக்கிறது. Chakshu அம்சத்தின் மூலம் சைபர் அச்சுறுத்தல் ஏற்படுத்திய சுமார் 42.14 லட்சத்துக்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் செயலிழக்கச் செய்யப் பட்டுள்ளன.
நிதி மோசடி அபாயம் குறித்த தகவல் வழங்குவதோடு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், யுபிஐ சேவை அளிப்போர் மற்றும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தச் செயலி பயன்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பெயரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மொபைல் எண்களையும் பார்க்கவும், பயன்படுத்தாத செல்போன் எண்களைக் குறித்து புகாரளிக்கவும் இந்தச் செயலி உதவுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து புதிய செல்போன்களிலும் அடுத்த 90 நாட்களுக்குள் Sanchar Saathi செயலியை Pre-Install செய்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நீக்க முடியாத செயலியைக் கட்டாயமாக்குவது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் மாநிலங்களைக் கண்காணிக்க இந்தச் செயலி கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதுடன் இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன.
இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்தச் செயலி முற்றிலும் மக்களின் விருப்பத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர், உளவு பார்ப்பதையோ அல்லது அழைப்பு கண்காணிப்பையோ இந்தச் செயலி செய்யாது என்றும் கூறியுள்ளார்.
உலகில் எங்கும் இது போன்ற அரசின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்று கூறியுள்ள ஆப்பிள் நிறுவனம், இதுகுறித்து அரசுக்குத் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம்சங் உள்ளிட்ட பிற செல்போன் நிறுவனங்கள் அரசின் உத்தரவு குறித்து பரிசீலனை செய்து வருவதாகவதாகக் கூறப்பட்டுள்ளது.
















