பல்கேரியாவில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
ஊழல் காரணமாகவே பல்கேரியா நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாகப் பல்கேரியா தலைநகர் சோபியாவில் இளைஞர்கள் உட்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோபியா மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் வீதிகளில் திரண்டு அரசுக்கு எதிராகத் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
அரசின் பட்ஜெட் திட்டமானது நாட்டில் நிலவும் பரவலான ஊழலை மறைக்கும் முயற்சி என்றும் ஊழல் காரணமாகவே நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஊழல் எதிர்ப்பு இயக்கமாகத் தொடங்கிய இப்போராட்டம், சோபியாவில் மோதலாக மாறியுள்ளது.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் முயன்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது குப்பை தொட்டிகளில் தீயிட்டும், கற்களை வீசியும் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது.
















