‘திரௌபதி 2’ படத்தில் பாடியதற்காக பாடகி சின்மயி வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், அவர் வருத்தம் தெரிவிக்க காரணம் என்ன என்பதை விளக்கக்கோரி படத்தின் இயக்குநர் மோகன் ஜி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் பாடலான எம்கோனே பாடலை பாடகி சின்மயி பாடியிருந்தார். இதன் PROMO அண்மையில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையே PROMO-வை கண்ட சின்மயியின் ரசிகர்கள் பலர், பெண் சுதந்திரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தட்டிக்கேட்கும் சின்மயி, பெண்களுக்கு எதிரான சுயசாதி திரைப்படங்களை எடுக்கும் மோகன் ஜி-யின் திரைப்படத்தில் பாடியது ஏன்? எனக்கேட்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
அதனை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் சின்மயி வெளியிட்ட பதிவில், ‘திரௌபதி 2’ படத்தில் பாடியதற்காக தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார்.
இது தொடர்பாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், சின்மயி வருத்தம் தெரிவிக்க என்ன காரணம் என்பது பற்றி விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், சின்மயியின் பதிவு திரைப்படத்தை தொழில் ரீதியாக பாதித்துவிடாமல் இருக்க அவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இயக்குநர் மோகன் ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
















