இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இந்து மதத்தில் திருமணமாகதவர்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார், இரண்டு முறை திருமணம் செய்பவர்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார், மது அருந்துபவர்களுக்கு மற்றொரு கடவுள் இருக்கிறார் என இழிவாக பேசினார்.
ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரேவந்த ரெட்டியின் பேச்சு, இந்துக்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மன்னிப்பு கேட்டு தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. மேலும் மாநில தழுவிய போராட்டத்திற்கு தெலங்கானா பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சையாக பேசி, ரேவந்த் ரெட்டி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் பாஜக மற்றும் இந்து கடவுளை விமர்சிக்கும் வகையில் பேசிய ரேவந்த் ரெட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
















