பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளதாக அவரது சகோதரி உஸ்மா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான் கான், ஊழல் குற்றாச்சாட்டில் சிக்கி கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் உள்ள தனியறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை சந்திக்க குடும்பத்தார் முயன்றபோது, சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இம்ரான் கானின் குடும்பத்தாரும், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் அடிலா சிறை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இம்ரான் கானின் உடல்நிலை மோசமாகியிருக்கலாம் எனவும், அவர் சிறைக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் குடும்பத்தார் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டது.
அதனால் சிறையில் உள்ள இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு சிறைத்துறை அதிகாரிகள் அனுமதியளித்தனர்.
அதனடிப்படையில் அவரை நேரில் சந்தித்து பேசிய சகோதரி உஸ்மா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இம்ரான் கான் உயிருடன் இருப்பதாகக் கூறிய அவர், தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு உளவியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளிக்கப்படுவதாகவும் கூறினார்.
















