குன்னூர் ராணுவ பயிற்சி மையத்தில் 31 வாரப் பயிற்சியை அக்னி வீரர்கள் வெற்றிகரமாக முடித்த நிலையில், வெலிங்டனில் சத்திய பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் 6-வது படை பிரிவு அக்னி வீரர்களுக்கு 31 வாரப் பயிற்சி நடைபெற்றது.
ஒவ்வொரு வீரருக்கும் ஒழுக்கம் மற்றும் தொழில்முறையின் முக்கிய பண்புகளை பிரதிபலிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அக்னி வீரர்களுக்குப் பயிற்சி முடிந்த நிலையில், பேரக்ஸ் ஸ்ரீ நாகேஷ் சதுக்கத்தில் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், புனித நூல்கள் மற்றும் தேசிய கொடி மீது 690 அக்னி வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், பயிற்சியில் சிறந்து விளங்கிய அக்னி வீரர்களுக்குப் பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கப்பட்டன.
















