இந்தியா – வங்கதேச நாடுகள் இடையேயான உறவில் ஏற்பட்டிருந்த பதற்றம் மெல்ல விலகி, மீண்டும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வரும் சூழல் உருவாகியுள்ளது. முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நலம் குறித்து வினவி, பிரதமர் மோடி பதிவிட்ட செய்தியும், இந்தியாவுடனான டாக்காவின் மென்மையான அணுகுமுறையும், இருதரப்பு உறவுகள் மீளத் தொடங்கியுள்ளதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளன. இது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மீதான சட்ட நடவடிக்கைகளும், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும், இந்தியாவுடனான உறவில் பதற்றம் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது. இந்தியாவுடன் நெருக்கமான உறவை தொடர்ந்து வந்த ஹசினா பதவியில் இருந்து நீங்கியதை தொடர்ந்து டாக்காவில் உருவான புதிய இடைக்கால ஆட்சி ஆபத்தான இஸ்லாமிய குழுக்களுக்கு அரசியலில் இடமளித்தது.
அந்த நேரத்தில் இந்தியாவை குற்றம் சாட்டும் வகையில் வங்கதேச அதிகாரிகள் வெளியிட்ட சில அறிக்கைகளும் இருதரப்பு நம்பிக்கையை சீர்குலைத்தன. அதன் விளைவாக இரு நாடுகளிடையே அதீத பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தப் பதற்றம் மெல்ல தணிந்து இந்தியா – வங்கதேசம் ஆகிய இரு நாடுகளும் தங்கள் உறவைச் சீர்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக வங்கதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலீலுர் ரஹ்மான் டெல்லி வருகை தந்தது, இந்தப் பதற்றத்தை குறைக்கும் முதல் அறிகுறியாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது பிரதமர் மோடி, கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும், முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவருமான கலீதா ஜியாவின் உடல் நலன்குறித்து வினவி வாழ்த்து செய்தியொன்றை பதிவிட்டுள்ளார்.
இது, இருதரப்பு உறவுகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் இந்தியாவின் முயற்சியை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கிடையே டாக்கா தலைமையும் அண்மை காலமாக இந்தியாவுக்கு எதிரான விமர்சன கருத்துக்களை குறைத்துள்ளது. அதன் பிரதிபலிப்பாக வங்கதேச வெளியுறவுத்துறை ஆலோசகர் தொய்ஹீத் ஹொசைன், சில பிரச்னைகள் இருக்கும் பட்சத்திலும், இரு நாடுகளின் நலன்களை முன்னிறுத்தியே வங்கதேசம் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கடந்த ஆண்டு கலவரங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட சம்பவத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா பிரச்னையில் சுமூக தீர்வு காணாவிட்டால், அது இரு நாடுகளுக்கிடையேயான உறவில் ஒரு தடையாக இருக்கும் என்பதை இந்தியா புரிந்துகொண்டுள்ளது.
இந்தச் சூழலில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல் நலன் குறித்த பிரதமரின் வாழ்த்துச் செய்தி, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டுப் பிரதமர் மோடி வங்கதேசம் சென்றபோது இருவரும் நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினர். பின்னர் சிறிது காலம் லண்டனில் வசித்து வந்த கலீதா ஜியா சமீபத்தில் நாடு திரும்பினார்.
தற்போது இதய மற்றும் நுரையீரல் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை கண்காணிக்க சீன மருத்துவர்களும் டாக்கா வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமராக இருந்த ஷேக் ஹசினா தனது ஆட்சிக்காலம் முழுவதும் இந்தியா மற்றும் அவாமி லீக் தலைமையிலான உறவுகளை மட்டுமே வலுப்படுத்தி வந்தார். அவர் அரசியல் மாற்றத்திற்கான மாற்று வாய்ப்புகள் எதையும் உருவாக்கவில்லை.
இதனால் அவர் பதவி விலகியபோது இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்ற முகம்மது யூனுஸ் ஆபத்தான இஸ்லாமிய குழுக்களுக்கு அரசியலில் இடமளித்தார். இந்த சூழலைப் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்டன. இந்த நிலையில் அந்நாட்டில் முன்னணி கட்சியாக விளங்கும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியுடன் இந்தியாவின் தொடர்பு அதிகரிப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அதிக இடங்களை பெறக்கூடிய கட்சியாக BNP எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜமாயத்-எ-இஸ்லாமி கட்சியை கூட்டணி சேர்க்காமல், அந்த கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதும் இந்தியாவுக்கு சாதகமான சூழலாக கருதப்படுகிறது. ஜமாயத் இஸ்லாமியின் மாணவர் அமைப்பு டாக்கா பல்கலைக்கழக தேர்தலில் பெற்ற வெற்றி வங்கதேசத்தில் அக்குழுவின் வளர்ச்சியை எடுத்துரைக்கிறது.
இந்தக் குழுவின் பாகிஸ்தான் ஆதரவு நிலைபாடு காரணமாக இந்தியா மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்.பி சஷி தரூரும் இந்தக் கவலைக்குரிய சூழலை முன்னெச்சரிக்கையுடன் கடக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். கலிதா ஜியாவின் உடல்நிலை அவரது கட்சிக்கு அனுதாப அலையை ஏற்படுத்தும் என்பதால், அவரது மகன் தாரிக் ரஹ்மான் லண்டனிலிருந்து திரும்பிக் கட்சியை வழிநடத்த வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் சட்ட மரபுகளோ அல்லது அரசியல் நிலைபாடுகளோ அவரை நாடு திரும்ப விடாமல் தடை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகப் புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழலில் வங்கதேசத்தின் எதிர்கால பாதையை 2026-ம் ஆண்டு தேர்தல் தீர்மானிக்க உள்ளதை இந்தியா நன்கு அறிந்துள்ளதாகவும், ஆகவேதான் ஹசினா விவகாரம் தொடர்பான ஆவேச உரையாடல்களுக்கு மத்தியில், இந்தியா பொறுமையுடன் இருதரப்பு உறவில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
















