சாலையோரம் கிடந்த சாதாரண கல்லை, ஒரு வசீகரப் பொருளாக மாற்றிய இளைஞரின் கலைத்திறன், இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்றார் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை.
அத்தகைய சொல்லுக்கேற்ப, நாம் தினந்தோறும் பார்க்கும் சாதாரண கல், டெல்லியில் ஒரு இளைஞரின் கண்களுக்குக் கடிகாரமாகத் தோன்றியுள்ளது.
இந்த எண்ணத்தை செயல்படுத்தி விடலாம் என்று முடிவெடுத்த அந்த இளைஞர், முதலில் அதற்கான ஒரு சிறந்த கல்லைத் தேர்ந்தெடுத்தார்.
பின், அதனை ஒரு கைவினை கலைஞரிடம் கொடுத்து, தனக்கு தேவையான வடிவில் வெட்டி எடுத்து, பின் அதில் ஒரு கடிகாரத்தை பொருத்தி, அந்தக் கல்லை அனைவரும் பார்த்து வியக்கும் ஒரு கடிகாரமாக மாற்றியுள்ளார்.
பிறகு அந்தக் கடிகாரத்தை அவர் சந்தைக்கு எடுத்துச் சென்றபோது, ஒரு வாடிக்கையாளர் அதை ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார்.
இந்தக் கடிகாரத்தை உருவாக்க அந்த இளைஞருக்கு ஆன செலவு வெறும் 460 ரூபாய் மட்டுமே. ஆனால் அதனை விற்றதன்மூலம் அவருக்குக் கிடைத்த லாபம், 987 சதவீதத்திற்கும் அதிகமானது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, இளைஞரின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் வணிகத் திறமைக்காகப் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
















