இந்தோனேசியாவில் கடும் பசியின் காரணமாகத் தண்ணீரில் மிதந்து வந்த குளிர்சாதன பெட்டியில் கிடைத்த உணவுப் பொருட்களை சாப்பிட்ட வீடியோ காண்போரை கண்கலங்க செய்கிறது.
அடுத்தடுத்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடும் சேதத்தை சந்தித்து வரும் இந்தோனோசியாவில் கடந்த வாரம் சென்யார் புயலால் வடக்கு மற்றும் மேற்கு சுமத்ரா, அசே ஆகிய 3 மாகாணங்களில் 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான வெள்ளச் சேதத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 811 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் 600-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டும், சாலைகள் சேறும் சகதியும் சூழ்ந்தும் காணப்படுகின்றன.
பலர் 3 நாட்களுக்கும் மேலாகச் சாப்பிட உணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். தூய குடிநீர், இணையதள வசதி, மின் இணைப்பு வசதியின்றி பலர் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் பாங் பிராம் என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் 8 மணி நேரத்திற்கு மேலாகப் போராடி தனது குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டார்.
இதனால் கடும் பசி மற்றும் சோர்வில் இருந்த அந்த நபர் தண்ணிரில் மிதந்து வந்த குளிர்சாதனப் பெட்டியில் கிடைத்ததை எடுத்துச் சாப்பிட்ட வீடியோ வைரலாகி உள்ளது.
















