அம்பாசமுத்திரம் மரச் சொப்பு சாமான்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளது நெல்லை மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் புகழ்பெற்ற மரச் சொப்பு சாமான்கள் செய்யும் பணியில் தலைமுறை தலைமுறையாக 2 நூற்றாண்டுகளாகக் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நுணுக்கமான வேலைப்பாடுகளால் இயந்திரங்கள் உதவியின்றி கைகளால் இழைத்து சொப்பு சாமான்களை கைவினை கலைஞர்கள் தயாரித்து வருகின்றனர்.
உள்ளூர் மரவகைகளான மஞ்சள் கடம்பு, தேக்கு, ரோஸ்வுட் போன்ற மரங்களைக் கொண்டு குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் சொப்பு சாமான்களை கைவினை கலைஞர்கள் தயாரித்து வரும் நிலையில், புவிசார் குறியீடு கேட்டுப் பல்வேறு தரப்பினர் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்று மரசொப்பு சாமான்களுக்குப் புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த அங்கீகாரம் அம்பாசமுத்திரம் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களின் கலைப்படைப்புகளுக்கு சர்வதேச சந்தையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















