கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் மாயமான விமானத்தைத் தேடும் பணி, வரும் 30ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதி, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 227 பயணிகள் மற்றும் 12 விமானப் பணியாளர்களுடன் சீனாவுக்கு புறப்பட்ட MH370 விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து மாயமானது.
2017ஆம் ஆண்டு வரை சுமார் 26 நாடுகள் ஒன்றிணைந்து 60 கப்பல்கள் மற்றும் 50 விமானங்கள் மூலம் மாயமான விமானத்தைத் தேடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
அதன் பின், 2018ஆம் ஆண்டு Ocean Infinity என்ற அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம், 3 மாதங்கள் தேடியும் மாயமான மலேசியா விமானத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது.
மாயமான விமானத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், ஊதியமில்லை என்ற நிபந்தனையின் அடிப்படையில் Ocean Infinity நிறுவனம் மலேசியா அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
விமானத்தைக் கண்டுபிடித்துவிட்டால், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் கோடி வழங்கப்படும் என்றும் மலேசியா அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அதே நிறுவனம், வரும் 30ஆம் தேதி முதல் மீண்டும் விமானத்தை தேடும் பணியைத் தொடங்க இருப்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.
















