நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே போலீஸ் ஏட்டுவை ஓட ஓட விரட்டி அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பை அருகே உள்ள பொத்தை பகுதியை சேர்ந்த இசக்கிப்பாண்டி என்பவருக்கும், ஆலங்குளத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமி நெட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நெட்டூரில் உள்ள மனைவியின் வீட்டுக்குச் சென்ற இசக்கிப்பாண்டி, குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். அதற்கு மகாலட்சுமி வரமறுத்ததால் இசக்கிப்பாண்டி நண்பருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் ஏட்டு முருகன் என்பவர் பெண் காவலருடன் சம்பவத்திற்கு சென்றுள்ளார். அங்கு நடந்த சம்பவங்களை வீடியோவாகப் பதிவு செய்த போலீஸ் ஏட்டுவை இசக்கிப்பாண்டி விரட்டிச் சென்று அரிவாளால் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
இது தொடர்பாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டு முருகன் புகார் அளித்த நிலையில், காவல் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய இசக்கிப்பாண்டி உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
















