மழைநீர் வடிகால் பணி பாதியிலே நிற்பதால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காமராஜர்புரத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி வீட்டிற்குள் புகுந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகத் தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், வடபழனி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் மழை நீரானது ஆங்காங்கே தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது.
இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள காமராஜர்புரத்தில் தொடர் மழையின் காரணமாக மழைநீர் தேங்கி வீட்டிற்குள்ளேயே புகுந்தது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
பருவ மழை காலங்களில் மழைநீர் தேங்கி கழிவு நீரோடு வீட்டிற்குள் புகுவதாகவும், கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் மழை நீர் வடிகால் பணிகள் பாதியிலேயே இருப்பதனால் மழைநீர் வெளியேறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் கூறுகின்றனர்..
















