காரைக்குடி வைரவபுரம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மழை காலங்களில் வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்து வருவதாகவும், அடிப்படை வசதிகளை அரசு செய்து தராததால் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரம் 4 மற்றும் 5வது வீதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வைரவபுரம் பகுதி காரைக்குடி மாநகராட்சியுடன் இணைந்து ஓராண்டான நிலையில், அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்தி வருவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளாகத் தங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சியளிப்பதாகவும், போதிய வடிகால் வசதிகள் இல்லாததால் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அடிப்படை வசதிகள் கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இதே நிலை நீடித்தால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















