பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயல் செல்லும் ஜிஎஸ்டி சாலை போடப்பட்டு ஒரு மாதத்திலேயே மிக மோசமான நிலையில் உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மாதத்திற்கு முன்பு தார்சாலை போடப்பட்டது.
கடந்த சில நாட்களாகச் சென்னையில் பெய்த கனமழை காரணமாகப் பெருங்களத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாகக் காணப்படுவதாகவும், ஜி.எஸ்.டி.சாலை உயிர் பழி வாங்கும் சாலையாக மாறி உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதாகவும், மழை நின்ற பிறகும் சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையை உடனடியாகச் சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















