பாகிஸ்தான் உடனான உறவு மோசமடைந்த நிலையில் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் நெருங்கி வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக ஈரானின் சபாகர் துறைமுகம் உள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்கானிஸ்தானில் உள்ள வர்த்தகர்கள் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை 90 நாட்களுக்குள் படிப்படியாக நிறுத்த வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் துணைப் பிரதமர் முல்லா அப்துல் கானி பரதார் அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இந்தியா-ஆப்கனிஸ்தான் இடையே அண்மையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில், ஈரானின் சபாஹர் துறைமுக வழித்தடத்தை முழுமையாக செயல்படுத்துவது, சுங்கம் மற்றும் வங்கி நடைமுறைகளை எளிமையாக்குவது, போன்ற நடவடிக்கைகள் மூலம், 2021-க்கு முந்தைய 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.
வணிக விசாக்களை விரைவாக வழங்குதல், சபாஹர் துறைமுகத்திலிருந்து வழக்கமான கப்பல் பாதைகளைத் தொடங்குதல், நிம்ருஸ் மாகாணத்தில் உலர் துறைமுகங்களை உருவாக்குதல் மற்றும் நவா ஷேவா துறைமுகத்தில் ஆப்கானிய பொருட்களுக்கான இறக்குமதி-ஏற்றுமதி செயல்முறைகளை எளிதாக்குதல் மட்டுமில்லாமல், மருந்துகள், குளிர்பதன சேமிப்பு சங்கிலிகள், பழ பதப்படுத்தும் அலகுகள், தொழில்துறை பூங்காக்கள், SME மையங்கள் மற்றும் ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் கூட்டு முதலீடுகளை ஊக்குவிக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தியாவுடனான ஆப்கானிஸ்தான் வர்த்தகத்துக்கு ஈரானின் சபாஹர் துறைமுகம் முக்கிய மைய புள்ளியாக உள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இந்த துறைமுகம் ஓமன் வளைகுடாவுக்கு அருகில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தானைத் தவிர்த்து இந்தியா மற்றும் மத்திய ஆசியாவுக்கு நேரடி வழியை ஆப்கானிஸ்தானுக்கு வழங்குகிறது. இந்தியாவுடனான வர்த்தக போக்குவரத்தை மேம்படுத்த உஸ்பெகிஸ்தானும் இந்த துறைமுகத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியா, ஈரான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 13 உறுப்பு நாடுகளுடன் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் 2000ம் ஆண்டில் முறையாக தொடங்கப்பட்டது. சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்துடனும் (INSTC)இணைப்பில் உள்ள சபாஹர் துறைமுகம், இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் ஐரோப்பாவை இணைக்கிறது.
இதனால் இந்நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்து பயண நேரம் கணிசமாகக் குறைகிறது. துருக்கி, ஜார்ஜியா, அஜர்பைஜான் மற்றும் ஈரானுடன் ஆர்மீனியா எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஈரானை கருங்கடல் பகுதி மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் பாலமாக ஆர்மீனியா உள்ளதால் , சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் விரிவாக்கத்துக்காக இந்தியாவும், ஈரானும், ஆர்மீனியாவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
சபாஹர் துறைமுகம் மற்றும் ஆர்மீனியா பாதை போன்ற புதிய வழித்தடங்களை அதிக அளவில் பயன்படுத்துவது மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடனான இந்தியாவின் வர்த்தக தொடர்புகளை அதிகப்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியா கட்டிய ஜரஞ்ச்-டெலாராம் நெடுஞ்சாலையுடன் இணைந்து, ஒரு மீள்தன்மை கொண்ட மல்டிமாடல் நடைபாதையை உருவாக்கியுள்ளது. இந்திய தொழிற்சாலைகளில் இருந்து பொருட்கள் கடல் வழியாக சபாஹருக்குச் சென்று, அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்குச் செல்கின்றன.
2023ம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதியே பாகிஸ்தான் வழியைத் தவிர்த்து, ஈரானின் சபாஹர் துறைமுகம் வழியாக முதன்முறையாக இந்தியாவுக்குப் பொருட்களை ஆப்கானிஸ்தான் ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. முதல் முறையாக மேற்கு ஆப்கானிஸ்தானின் ஜராஞ்ச் நகரத்திலிருந்து 570 டன் உலர்ந்த பழங்கள், ஜவுளி, தரைவிரிப்புகள் மற்றும் கனிமப் பொருட்கள் இருபத்தி மூன்று லாரிகளில் ஈரானின் சபாஹர் துறைமுகம் வழியாக மும்பைக்கு அனுப்பி வைக்கப் பட்டன.
இதன் மூலம், ஆப்கானிஸ்தானை ஒரு இறக்குமதி நாடு என்பதில் இருந்து ஏற்றுமதி நாடாக சபாஹர் துறைமுகம் மாற்றியது. முன்னதாக, 2017ம் ஆண்டில் சபாஹர் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 1.1 மில்லியன் டன் கோதுமையை இந்தியா வெற்றிகரமாக அனுப்பியது. அதே ஆண்டில், இருதரப்பு வர்த்தகத்திற்காக காபூலுடன் ஒரு விமான வழித்தடத்தையும் இந்தியா தொடங்கியது. ஆப்கானிஸ்தானுக்கான வர்த்தகப் பாதை தொடங்கப்பட்டதாகவும் இது பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற பரந்த யூரேசிய நெட்வொர்க்குகளுக்கு ஆப்கானிஸ்தானை இணைத்து வைத்த இந்தியா அந்நாட்டின், இறக்குமதி-ஏற்றுமதி சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இனியும் பாகிஸ்தானின் நிழலில் வாழ விரும்பாத ஆப்கானிஸ்தான், இந்தியாவுடன் நெருக்கம் காட்டுகிறது. பாகிஸ்தான் மூடிய கதவை இந்தியா திறக்கிறது. இது புதிய புவிசார் அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
















