இந்தியா மீது தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்துவதற்காக, 5000க்கும் மேற்பட்ட பெண் ஜிகாதிகளை உருவாக்கியுள்ளதாகப் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தானின் பகவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் அழிக்கப்பட்டது. இந்தியாவின் ராணுவத் தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் பெரிய அக்கா, மைத்துனர் யூசுப் அசார், மைத்துனரின் மனைவி, அவர்களின் 5 குழந்தைகள் மற்றும் மசூத் அசாரின் பாதுகாவலர்கள் 4 பேர் உட்பட 100க்கும் அதிகமான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் அதிரடித் தாக்குதலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த ஜெய்ஷ்-இ-முகம்மது, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை மீண்டும் நடத்த புதிய யுக்திகளை செயல்படுத்தி வருகிறது. இதுவரை பெண்களை நேரடியாகப் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாத ஜெய்ஷ்-இ-முகம்மது முதன்முறையாகப் பெண் ஜிகாதிகளை உருவாக்க ஜமாத்-உல்-மோமினாத் என்ற பெயரில் ஒரு மகளிர் பிரிவை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பகவல்பூரில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய பிரிவில் சேரும் பெண்களைத் தற்கொலைப் படை ஜிகாதிகளாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மசூத் அஸார் மற்றும் அவரது சகோதரர் தல்ஹா அல்-சைஃப் ஆகியோரின் ஒப்புதலுடன், மசூத் அஸாரின் சகோதரி சதியா அஸார் இந்தப் புதிய பெண்கள் ஜிகாதி பிரிவுக்குத் தலைமை ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மசூத் அசாரின் மற்றொரு சகோதரியான சஃபியா அசார், புல்வாமா தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட உமர் ஃபரூக்கின் மனைவி அஃப்ரீரா ஃபரூக் ஆகியோரும் இந்தப் பிரிவில் முக்கியப் பொறுப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
‘துஃபத் அல்-முமினத்’ என்ற பெயரில் நடத்தப்படும் ‘ஆன்லைன்’ ஜிகாதி பயிற்சி வகுப்பில் சேரும் ஒவ்வொரு பெண்ணிடமும் 500 பாகிஸ்தான் ரூபாய் நன்கொடையாக வசூலிக்கப்படுவதாகவும் தினமும் 40 நிமிடங்கள் நடைபெறும் இந்த வகுப்புகள் மூலம், மத ரீதியாகவும், ஜிகாத் சார்ந்தும் போதனைகள் அளிக்கப்பட்டு பெண்களை மூளைச்சலவை செய்து பயங்கவாதிகளாக மாற்றுவதாவும் கூறப்படுகிறது.
இந்தப் பெண் ஜிகாதிகள் அமைப்பின் இந்திய பிரிவின் தலைவராக டெல்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய டாக்டர் ஷாகின் சயீத் செயல்பட்டு வந்தது புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் நடத்தும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு டாக்டர் ஷாகின் சயீத் மூலமே நிதி வழங்கி வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், மசூத் அசார் தனது எக்ஸ் பக்கத்தில், வெற்றிகரமாகப் புதிய பெண்கள் தற்கொலை படைப்பிரிவில் 5000க்கும் மேற்பட்ட பெண்களைச் சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பெண் ஜிகாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் மாவட்டந்தோறும் தனி அலுவலகங்களைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முழுமையான செயல்பாட்டு மையங்களாகச் செயல்படும் இந்தப் புதிய அலுவலகங்கள் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலிருந்து பெண் ஜிகாதிகளுக்குப் பயிற்சி அளிப்பது வரை அனைத்தையும் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. ஜமாத்துடன் இணைந்திருப்பது, “வாழ்க்கையில் நோக்கத்தை” அளித்துள்ளதாகக் கூறியுள்ள பெண் ஜிகாதிகளின் கடிதங்களையும் மசூத் அசாரின் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தானில் உள்ள ‘ஜிகாதி நெட்வொர்க்குக்கு அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழகம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள மசூத் அசார், ஏற்கெனவே ‘ஜமாத் உல்-முமினத் என்ற மகளிர் பிரிவின் தேவை, செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி வெளிப்படையாக விளக்கி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இஸ்லாத்துக்காக உயிர்விடும் தியாகத்துக்காக ஜன்னத் எனப்படும் இறுதி சொர்க்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மசூத் அசார் குறிப்பிருந்தார் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெண் ஜிகாதி அமைப்புக்கான ஆள்சேர்ப்பு பணிகள் மற்றும் பயிற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் வழியாக ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் பெண் ஜிகாதிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
















