கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் கொடிமரம் அருகே எழுந்தருளிய நிலையில், கொடிமரத்திற்கு பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, தனுசு லக்னத்தில் நந்திம்பெருமான் பொறித்த திருக்கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதனை அடுத்து, பஞ்ச மூர்த்திகளுக்கும் மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















