இந்தியாவில் விமானப் போக்குவரத்து முடங்கிப் போயிருக்கும் நிலையில், இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்கள் ஆட்டம் காணும் பட்சத்தில் அது இந்தியா முழுவதும் விமானப் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும் சூழலை உருவாக்கியுள்ளது.
ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள்தான் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விமானப் போக்குவரத்தை வழங்கி வருகின்றன. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், இரண்டே இரண்டு விமான நிறுவனங்களையே இந்தியா அதிகம் நம்பியிருப்பதாக விமான போக்குவரத்து நிபுணர்கள், ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்த நிலையில், இன்றைய சூழல் அதனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 60 சதவிகிதத்திற்கும் மேலாக கையில் வைத்திருக்கிறது இண்டிகோ நிறுவனம்…. டாடாவுக்கு சொந்தமான ஏர் இந்தியா குழுமம் 26 சதவிகித விமானச் சேவையை வழங்கி வருகிறது. இரு விமான நிறுவனங்கள் மட்டுமே 86 சதவிகித உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
அண்மைக்காலமாக ஏர் இந்தியா தனது விமானச் சேவையில் ஆட்டம் காட்டி வந்த நிலையில், இண்டிகோ திட்டமிட்டபடி விமானச் சேவைகளை வழங்குவதில் கடந்த சில நாட்களாக தடுமாறி வருகிறது. விமானச் சேவை ரத்து, தாமதங்கள் போன்றவை இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் அட்டவணையை முடக்கிப் போட்டுள்ளன. வியாழக்கிழமை 550க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ ரத்து செய்தது.
வெள்ளிக்கிழமை, நெருக்கடி முற்றியதால் , மேலும் 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன . தொழில்நுட்பக் கோளாறு, ஆட்கள் பற்றாக்குறை, திட்டமிடலில் குளறுபடி போன்றவை இண்டிகோ நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், தொடர்ந்து 4வது நாளாக விமானச் சேவைகள் முடங்கியிருப்பது, பயணிகளை பெரிதும் பாதித்துள்ளது… குறிப்பாக புவனேஸ்வர் இருந்து பெங்களூருக்கான விமானச் சேவை ரத்தானதன் காரணமாக புதுமண தம்பதிகள் தங்களது வரவேற்பு நிகழ்த்தியை காணொலியில் நடத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை, மட்டும், இண்டிகோ நிறுவனத்தின் செயல்திறன் 8.5% ஆகக் குறைந்திருப்பது, வரலாற்றின் கரும்புள்ளியாக பதிந்தது. இந்த வார நிதி நெருக்கடிக்கு ஏர் இந்தியா நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், சமீபத்திய மாதங்களில் அதன் செயல்பாட்டுக் குறைபாடுகள், பாதுகாப்பு குறித்த கவலைகள் குறித்து பயணிகளிடையே ஏற்பட்ட அச்சத்தை அந்நிறுவனம் எதிர்கொண்டுள்ளது.
ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற சிறிய விமான நிறுவனங்கள், சில மணி நேரங்களுக்குள் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான பயணிகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. இதன் விளைவாக, ஒரு விமான நிறுவனத்தை பாதித்த நெருக்கடி, விரைவாக முழு விமானப் பயணிகளையும் பாதிக்கும் நெருக்கடியாக மாறியது.
உலகின் மூன்றாவது பெரிய விமானச் சந்தையாக இந்தியா முன்னேறி வரும் சூழலில், தற்போது ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளன.
இரண்டு முன்னணி விமான நிறுவனங்கள் தடுமாறும்போது, நாடு முழுவதும் உள்ள பயணிகள் அதன் தாக்கத்தை உடனடியாக உணர்கிறார்கள். இந்தியாவில் விமானப் போக்குவரத்தில் ஆழமான போட்டி உருவாகும் வரை, வழக்கமான இடையூறுகள்கூட ஒரு தேசிய விமானப் பிரச்சினையாகப் இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்…
இந்நிலையில் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சரகம் அறிவித்துள்ளது. விமான நிறுவனங்களின் சேவைகளுக்கான புதிய விதிகளை டிஜிசிஏ வாபஸ் பெற்றது. இதனால் விமான சேவை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















