உலகின் அனைத்து சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு, துருவ நட்சத்திரம்போல உறுதியாக நீடிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா-ரஷ்யாவின் 23வது உச்சி மாநாட்டில் பங்கேற்க புதின் டெல்லிக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் புதின் முன்னிலையில் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதன் பிறகு, பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா-ரஷ்யா இடையேயான நீண்டகால நட்பு குறித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு, துருவ நட்சத்திரம்போல உறுதியாக நீடிப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த உறவு பரஸ்பர மரியாதை மற்றும் ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் வேரூன்றி உள்ளது என்றும் கூறினார்.
மேலும், பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் போன்ற பாரம்பரிய பிரிவுகளைத் தவிர, அணுசக்தி, முக்கிய தாதுக்கள், இந்திய மாலுமிகளுக்கு பயிற்சி அளித்தல் போன்ற புதிய துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், முதலில் இந்தியா அளித்த சிறப்பான வரவேற்புக்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்தார். பிறகு, வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்திற்கு தடையின்றி எரிபொருள் விநியோகத்தை தொடர ரஷ்யா தயாராக இருப்பதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தக வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவும், ரஷ்யாவும் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கட்டும் திட்டத்தில் பணியாற்றி வருவதாகக் கூறிய புதின், ரஷ்யாவிலிருந்து இந்திய பெருங்கடலுக்கு புதிய சர்வதேச போக்குவரத்து வழிகளை உருவாக்க முயற்சிகள் நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
















