பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் சந்திப்புக்கு பின் வெளியிடப்பட்ட
கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா – ரஷ்யா இடையேயான வர்த்தகத்தை 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுங்கவரி மற்றும் சுங்கவரி அல்லாத வர்த்தக தடைகளை நீக்குவது, தளவாட சிக்கல்களை தீர்ப்பது, தடையற்ற பணம் செலுத்தும் வழிமுறைகளை உறுதி செய்வது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இந்தியாவில் சிறிய மற்றும் மிதக்கும் அணுமின் நிலையங்களை கட்ட ரஷ்யா ஒத்துழைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்கவும், உபகரணங்கள், எரிபொருளை வழங்கவும் ரஷ்யா உறுதியளித்துள்ளதாகவும், 2047-க்குள் இந்தியாவின் அணுசக்தி திறனை 100 ஜிகா வாட்டாக அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் இணைந்து செயல்படும் என்றும், ரஷ்ய குடிமக்களுக்கு 30 நாட்கள் இ-சுற்றுலா விசா வழங்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
















