இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை தொடர்ந்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் புதிதாக அமல்படுத்திய விதிகளை தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.
விமானப் பணியாளர்களின் சோர்வைப் போக்குவதற்காக, DGCA அண்மையில் FDTL விதிகளின் இரண்டாம் கட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி, வாராந்திர ஓய்வு நேரம் அதிகரிக்கப்பட்டதுடன், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை விமானிகள் மேற்கொள்ளும் தரையிறக்கங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.
இந்த புதிய விதிகளுக்கு ஏற்பப் போதுமான விமானிகளை இண்டிகோ முன்கூட்டியே நியமிக்காததால் கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனை கருத்தில் கொண்டு இண்டிகோவின் சாதாரண செயல்பாடுகளை மீட்டெடுக்க உதவும் வகையில், DGCA தளர்வுகளை வழங்கியுள்ளது. அதன்படி, வாராந்திர ஓய்விற்குப் பதிலாக விடுப்பை ஈடுகட்டக் கூடாது என்ற விதி உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதன் மூலம், விமானப் பணியாளர்களின் வாராந்திர ஓய்வு நாட்களுடன் அவர்களின் விடுப்பு நாட்களைச் சேர்த்துக்கொள்ள விமான நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
மேலும், இரவு நேரப் பணி மற்றும் தரையிறங்குவது தொடர்பான விதிகளில் இருந்தும் தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விலக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும், நிலைமையை ஆய்வு செய்து 15 நாட்களுக்கு ஒருமுறை இது மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் DGCA அறிவித்துள்ளது.
















