கனமழை காரணமாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒரு லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
டிட்வா புயல் காரணமாக நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்த கன மழையால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் நான்கு லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின.
மேலும், மழைநீர் வடியாததால் 20 முதல் 30 நாட்கள் ஆன இளம் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் அழுகி சேதமடைய தொடங்கியுள்ளன.
நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் அளவிற்கும் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் அளவிற்கும் தற்போது சம்பா மற்றும் தாளடி பயிர்கள் முழுமையாகச் சேதம் அடைந்துள்ளன.
ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் அளவிற்கு செலவு செய்து நடவு பணியில் ஈடுபட்ட விவசாயிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை வெறும் கண்துடைப்புக்கானது என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், டிஜிட்டல் கணக்கெடுப்பிற்கு பதிலாகப் பழைய கணக்கெடுப்பு முறையையே பின்பற்றி நிவாரணம் வழங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















