ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே புதிதாகத் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
சைனபுரம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் தரப்பில் திறந்து வைக்கப்பட்டது.
இங்குக் கொண்டுவரப்படும் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
மேலும், நெல்கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் பணியில் இல்லை எனவும், வேளாண் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் ஆயிரக் கணக்கில் நெல்மூட்டைகள் தேங்கியுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
நெல்மூட்டைகள் தேங்கி கிடப்பதால் மழைநீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
















