மைனர் குழந்தைகளை எந்தச் சூழ்நிலையிலும் பெற்றோர் கடைகளில் விற்கப்படும் பொருள் போலக் கருதக் கூடாது எனவும், அவர்களின் உணர்வு, விருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே, 11 வயதான இரட்டை ஆண் குழந்தைகளை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி கணவன் – மனைவி இரு தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்த விசாரணையில், குழந்தைகள் திங்கள் முதல் வெள்ளி வரை தாயிடமும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையிடமும் இருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்துக் கணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு விசாரணையில், குழந்தைகள் இருவரும், தாயிடமே இருக்க விருப்பம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இரு குழந்தைகளையும் தாயிடம் ஒப்படைக்க கூறிய நீதிபதிகள், கல்வி உள்ளிட்ட செலவுகளை தந்தை ஏற்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், மைனர் குழந்தைகளை, பெற்றோரோ, நீதிமன்றங்களோ எந்தச் சூழ்நிலையிலும் கடைகளில் விற்கப்படும் பொருள் போலக் கருதக் கூடாது என்றும், குழந்தைகளின் விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
















