லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தின் கார் பார்க்கிங்கில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, விமான நிலையம் மூடப்பட்டு, ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
ஹீத்ரோ விமான நிலையத்தின் டெர்மினல் மூன்றில் உள்ள கார் பார்க்கிங்கில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது, அங்கிருந்த நபர்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்ப்ரேவை தெளித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை அல்ல எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், ஒருவரை கைது செய்தனர்.
இத்தகைய சூழலில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறை, இது ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதம் காரணமாக நடந்த தாக்குதல் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக ஹீத்ரோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மற்றும் எலிசபெத் லைனின் சில சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்தச் சம்பவத்தால் விமான நிலையம் முழுவதுமாக மூடப்படவில்லை என்றாலும், டெர்மினல் 3 பகுதியில் தற்காலிக லாக்டவுன் காரணமாகப் பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
















