பயிர் கழிவுகளை எரிப்பது குறைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், டெல்லியின் காற்று மாசு வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. டெல்லியின் காற்று மாசுபட என்ன காரணம் என்பது பற்றிப் புதிய அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
விவசாய மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அக்டோபர் மாதம் தொடங்கி பயிர்க் கழிவுகளை எரிப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள விவசாயிகள், தங்கள் வயல்களில் உள்ள வைக்கோலை எரிப்பதன் மூலம் அகற்றுகிறார்கள். இது மண்ணை மறு நடவு செய்வதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கான மலிவான நடைமுறையாகும். கோடை காலத்தில் விதைக்கப்பட்ட நெல் அறுவடைக்கும், கோதுமை விதைப்புக்கும் இடையே குறுகிய கால இடைவெளி மட்டுமே இருப்பதால், வைக்கோலை எரிப்பது தவிர்க்க முடியாத நடைமுறையாக உள்ளது.
குளிர்கால மாதங்களில் டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கு இம்மாநிலங்களில் பயிர் எச்சங்களை எரிப்பதே காரணம் என்று பல்வேறு ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. முன்னதாக, பயிர் கழிவுகளை எரிக்காமல் அப்புறப்படுத்தும் தழைக்கூளம் மற்றும் விதை துளையிடும் இயந்திரங்கள் போன்ற விவசாய எந்திரங்களை வாங்க விவசாயிகளுக்கு இது வரை பல கோடி ரூபாயை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பயிர் எச்சங்களை எரிக்கும் போக்கு வேகவாகக் குறைந்துள்ளதாகக் கருதப்பட்டது. ஆனாலும் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு டெல்லியின் காற்றின் தரக் குறியீடு மிக மோசமான நிலைக்குச் சென்றது. பல இடங்களில் 450க்கும் மேலாகக் காற்றின் தரக்குறியீடு பதிவாகி இருந்தது. டெல்லி காற்று மாசு அதிகரித்ததில் கடந்த 15 ஆண்டுகளில், இந்த ஆண்டு தான் மூன்றாவது மோசமான ஆண்டாக இருக்கும் என்று (aerosol) ஏரோசல் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கான காரணத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
அதில் கண்காணிப்பு செயற்கைக்கோள்களைத் தவிர்ப்பதற்காகப் பயிர் கழிவுகளை எரிக்கும் நேரத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி, நாசாவின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி ஹிரென் ஜெத்வா தனது எக்ஸ் பக்கத்தில், வடமேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள விவசாயிகள் செயற்கைக்கோள் கண்காணிப்பைத் தவிர்த்து விட்டு வைக்கோல்களை எரிகின்றனரா என்று கேள்வியெழுப்பி இருந்தார். பொதுவாக துருவ-சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் 24 மணி நேரத்தில் இரண்டு முறை மட்டுமே ஒரு பகுதியை ஸ்கேன் செய்கின்றன.
துருவ-சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை பூமத்திய ரேகையைக் கடக்கின்றன என்று இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின், இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் டோட்டியோசாட் இரண்டாம் தலைமுறை (MSG) புவிசார் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்துள்ளனர். பிற்பகல் நேரத்தில் ஹரியானா மற்றும் பஞ்சாபில் புகை மூட்டங்கள் தோன்றுவதை GEO-KOMPSAT 2A புவிசார் நிலை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. அதாவது செயற்கைக்கோள்கள் இப்பகுதியை தீவிரமாகக் கண்காணிக்காத நேரத்தில் விவசாயிகள் தங்கள் பயிர் எச்சங்களை எரித்திருக்கலாம் என்பதையே இப்படங்கள் சுட்டிக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டில் மாலை 5 மணிக்கு புகை மூட்டங்கள் காணப்பட்டதாக அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் நான்கு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பயிர் எச்சங்கள் எரிப்பது 92 சதவீதம் குறைந்துள்ளதாக வந்த தகவல்கள் தவறானவை என்றும், செயற்கை கோள்கள் கண்காணிப்பில் தப்பித்து பிற்பகலில் பயிர் எச்சங்களை எரிப்பது மக்கள் அனைவருக்கும் தெரியும் என்று கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி, தனது எக்ஸ் பதிவில் நாசாவின் மூத்த விஞ்ஞானி ஹிரென் ஜெத்வா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பஞ்சாபின் நிலப் பதிவு அதிகாரியும் சங்ரூர் தொகுதி பட்வாரி யூனியனின் தலைவருமான விபின், செயற்கைக்கோள் கண்காணிப்பைத் தவிர்க்கவே மாலை 4 மணிக்குப் பிறகு பயிர்க் கழிவுகளை எரிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், சங்ரூரில் உள்ள அரசு விவசாய அதிகாரியான அமர்ஜீத் சிங்கும் , மாலை 4 மணிக்குப் பிறகே பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) போன்ற அரசு நிறுவனங்கள் துருவ சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களின் தரவையே பயன்படுத்துகின்றன.
அதன் அடிப்படையிலேயே, காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின் படி, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் ஹரியானா மற்றும் பஞ்சாபில் பயிர் கழிவுகளை எரிப்பது 90% குறைந்துள்ளதாக மக்களவையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்திருந்தார் வாகன மற்றும் தொழில்துறை மாசுபாடுகள் மற்றும் கட்டுமான தூசி ஆண்டு முழுவதும் காற்றை மோசமாக்கினாலும் ஹரியானா மற்றும் பஞ்சாபில் பயிர் கழிவுகளை எரிப்பதே டெல்லியின் காற்று மாசுபட முக்கிய காரணமாக உள்ளது. செயற்கைக்கோள்களை ஏமாற்றும் அம்மாநில விவசாயிகளின் தந்திரத்தை இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
















