அரசின் விதிகளைப் பின்பற்றாத எந்தவொரு விமான நிறுவனம் மீதும் நாங்கள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கும், ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிப்பதற்கும் வழிவகுத்த குழப்பம், புதிய பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்ட உள் நெருக்கடியின் விளைவு என்றார்.
விமானிகள் மற்றும் பயணிகள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம் என்று கூறிய ராம்மோகன் நாயுடு, இதனை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எடுக்கும் நடவடிக்கை ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று கூறிய அவர், நாட்டில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு உலகளாவிய தரநிலைகளை வழங்குவதே அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை என்று கூறினார்.
















