கொள்ளை வழக்கில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட நபர், நகைப்பட்டறையில் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பெரிய கடை வீதி பகுதியில் நவநீதன் என்பவர் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் வந்த சிலர், பட்டறைக்குள் புகுந்து சுமார் ஒரு கிலோ நகைகள் இருந்த மரப்பெட்டியை தூக்கிச் சென்றனர்.
இதுதொடர்பாக நவநீதன் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார், நகை துகள்களை சலித்து சேகரிக்கும் பணிசெய்யும் முருகன், சின்னதுரை ஆகியோர்தான் கொள்ளை அடித்தது எனக் கண்டுபிடித்தனர்.
முருகன் கடந்த 2017 ஆம் ஆண்டு நகை கடையில் அரை கிலோ தங்கத்தை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
ஏற்கனவே காவல்துறையிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் விசாரித்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பேட்டியளித்த காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், முருகனின் நன்னடத்தையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
















